சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை எனும் நூலை எழுதியுள்ளார். நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த விழாவில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகக் கூறினார்.
"மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ. 2,152 கோடியைத் தராமல் முரண்டு பிடிப்பதைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும்!
இங்கே இருக்கின்ற திக் விஜய சிங் உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவே பரிந்துரைத்திருக்கிற நிதிதான் அது! மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய அந்த நிதியைத் தங்களுடைய அற்ப அரசியலுக்காக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது.
இதற்கு எதிராக நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத்தான் போகிறது! எப்படி, நாட்டுக்கே வழிகாட்டும் தீர்ப்புகளைப் பெற்று, இன்றைக்கு இந்திய நாட்டின், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்து இருக்கிறோமோ, அதேபோல இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம் என நான் நம்புகிறேன்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.