தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் இலச்சினை '₹'-லிருந்து 'ரூ' ஆக மாறியது தொடர்பாக மாநில திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை முன்னிட்டு மாநில திட்டக் குழு சார்பில் முதன்முறையாக பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு இன்று சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ச்சியாக நிதிநிலை அறிக்கையின் இலச்சினையும் வெளியிடப்பட்டது. ரூபாயின் குறியீடாக இருந்த '₹' தேவநாகரி எழுத்தை மாற்றி 'ரூ' என்று தமிழ்நாடு அரசு அடையாளப்படுத்தியது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளப் பக்கத்தில் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இவற்றுக்கு மத்தியில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியான பிறகு திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் 'ரூ' என்பது எதற்காக மாற்றப்பட்டது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
"தேவநாகரி வேண்டாம் என்பதற்காக 'ரூ'" என்று ஜெயரஞ்சன் பதிலளித்தார்.