
தமிழகத்தில் புதிதாக 8 சிறு துறைமுகங்களை அமைக்கத் திட்டமிட்டு, தனியார் முதலீட்டாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய மாநிலங்களில் 1076 கி.மீ. நீளமுள்ள 2-வது மிக நீளமான கடற்கரைப் பகுதியைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. மேலும், கிழக்கில் வங்காள விரிகுடாவையும், மேற்கில் அரபிக்கடலையும் கொண்டுள்ள ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 3 பெருந்துறைமுகங்களும், கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் குளச்சல் என மாநில அரசின் கட்டுப்பாட்டில் 6 சிறு துறைமுகங்களும் இயங்கி வருகின்றன.
கடந்த 2023-ல் `மாநில துறைமுகங்கள் மேம்பாட்டுக் கொள்கையை’ தமிழக அரசு வெளியிட்டது. தனியார் பங்களிப்பு திட்டங்கள் மூலம் சிறு துறைமுகங்களை உருவாக்குவதில் நெகிழ்வான அணுகுமுறையை கடைபிடிக்க பல்வேறு உத்திகளை இந்த கொள்கை முன்மொழிந்தது.
இந்நிலையில் முகையூர், பனையூர், மரக்காணம், வானகிரி, சிலம்பிமங்கலம், விழுந்தமாவடி, மணப்பாடு, கன்னியாகுமரி கடற்கரை ஆகிய 8 இடங்களில் புதிதாக சிறு துறைமுகங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு, இதற்காக தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பள்ளி, எண்ணூர் சிறுதுறைமுகம், திருக்கடையூர், கூடங்குளம், கெம்ப்ளாஸ்ட் கடல் முனையம் (கடலூர்) ஆகிய தனியார் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள சிறு துறைமுகங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.