
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு வெண்கலச் சிலை வைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தினசரி காய்கறிச் சந்தை நுழைவுவாயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை அமைத்து பெயர்ப் பலகை வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர். பால்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொது இடங்களில் சிலைகளை நிறுவுவதற்கான உத்தரவுகளை அரசு வழங்க முடியாது என்று கூறியது. மேலும், 'தலைவர்கள் பூங்கா' என்பதை அமைப்பது நாட்டு இளைஞர்களுக்கு மேலும் பலனளிக்கும், அதன்மூலம் தலைவர்களின் சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்களை அவர்களால் படிக்க முடியும் என்றும் உயர் நீதிமன்றம் மாற்று சிந்தனையை முன்வைத்தது.
இதுபோன்ற உத்தரவுகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும், கடும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் உள்ளிட்ட காரணங்களும் முன்வைக்கப்பட்டன. பொது இடங்களில் சிலைகளை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதுபோன்ற உத்தரவுகள் எதையும் அரசு பிறப்பிக்கக் கூடாது என்று கூறி தமிழ்நாடு அரசின் அனுமதியை ரத்து செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரஷாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. "சிலை வைக்க அனுமதிக்க முடியாது. உங்களுடைய முன்னாள் தலைவர்களைப் போற்றுவதற்கு எதற்கு மக்கள் பணத்தைப் பயன்படுத்துகிறீர்கள்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.
சிலை வைக்க அனுமதி மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், மனுவைத் திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Supreme Court | Kalaignar Karunanidhi | Bronze Statue | Karunanidhi Statue | Madras High Court |