தமிழ்நாட்டில் 40 புதிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் – வனங்கள் ஆகியவற்றில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் அரசின் துணையோடு மலையேற்றப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தையும், https://trektamilnadu.com இணையதளத்தையும், முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் தொடங்கி வைத்தோம்.
மேலும், மலையேற்றத்திற்கு துணை நிற்கும் வனத் துறையின் வழிகாட்டிகளுக்கு சீருடை, மலையேற்றக் காலணிகள், தொப்பிகள், முதலுதவிப் பெட்டி, வெந்நீர்க் குப்பி, கம்பு, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட மலையேற்ற உபகரணங்களை வழங்கினோம்.
இயற்கையின் மீது பிரியம் கொண்டோர், நம் அரசின் துணையோடு மலையேற்ற அனுபவத்தை பெற்றிட, இப்புதிய முன்னெடுப்பு நிச்சயம் உதவும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள என் அன்பும், வாழ்த்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடக்கிவைத்தபோது, வனத் துறை அமைச்சர் க. பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.
மலையேற்றமானது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. https://trektamilnadu.com/ தளம் மூலம் முன்கூட்டியே எந்த மாவட்டத்தில் எந்த மலைப்பகுதியில் மலையேற்றம் செய்ய வேண்டும், எத்தனை நபர்களுடன் மலையேற்றம் செய்யவுள்ளோம், எந்தத் தேதி எந்த நேரத்தில் மலையேற்றம் செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களையெல்லாம் குறிப்பிட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான கட்டண விவரங்கள் அனைத்தும் இந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.