புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைப் பரிந்துரைக்க குழு: முதல்வர் உத்தரவு

மாநில அளவில் செய்ய வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைத்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைப் பரிந்துரைக்க குழு: முதல்வர் உத்தரவு

கடந்த ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக பரிந்துரை செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷிய அதீனியம் ஆகிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்தச் சட்டங்கள் கடந்த ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தன. இந்தச் சட்டங்களுக்கு தமிழ்நாடு, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், இந்தச் சட்டங்களில் மேற்கொள்ள திருத்தங்கள் குறித்து பரிந்துரை செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கடந்த ஜூலை 1 முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துகளைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் இப்புதிய சட்டங்களில் என்னென்ன சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பொதுத் துறைச் செயலாளர், சட்டத் துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்தப் புதிய சட்டங்களில் மாநில அளவில் பெயர் மாற்றம் உட்பட என்னென்ன திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதை ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைத்திட சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இக்குழு புதிய சட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்து, மாநில அளவில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து, மாநில அளவில் என்னென்ன திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய தனது அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் அரசுக்கு வழங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in