
ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை மாற்றும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறையை தவிர்ப்பதற்கான அரசாணையை கடந்த 2021-ல் தமிழக மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டது.
அரசு ஊழியர்கள் தவறு செய்யும் நிலையில், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுகிறது. சில நேரங்களில் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீதான விசாரணை நீண்டகாலம் செல்லும்போது, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்காக அவர்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் (இடைநீக்கம்) செய்யப்படுவார்கள்.
விசாரணையில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கவும், குற்றச்சாட்டிற்கு ஆளான அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதா, பணி நீக்கம் செய்வதற்கு உரியதா என்பதை ஆய்வு செய்யவும் தமிழக அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
2021-ல் வெளியிட்ட அரசாணையின்படி, அரசு ஊழியர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால், ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வதை தவிர்த்து, 3 மாதங்களுக்கு முன்னதாகவே உரிய முடிவை எடுக்கவேண்டும். விசாரணை, நடவடிக்கை ஆகியவற்றுக்கு உரிய கால அளவை ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பின்பற்றவேண்டும்.
மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை 3 மாதங்களுக்கு முன்பு முடிக்காமல் விசாரணை அதிகாரி தாமதப்படுத்தியிருப்பது தெரியவந்தால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும், இந்த அறிவுறுத்தல்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை, குற்ற வழக்குகளுக்குப் பொருந்தாது என்றும், அரசாணையில் கூறப்பட்டது.
இந்த சூழலில், ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக அரசு ஊழியர்கள் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், இனி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையை முற்றிலுமாக கைவிடும் வகையில், தமிழக மனிதவள மேலாண்மைத் துறை நேற்று (ஆக. 29) புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.