கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ: தமிழ்நாடு அரசு ஒப்புதல்

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ: தமிழ்நாடு அரசு ஒப்புதல்

இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.7 கி.மீ.
Published on

சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து அரசாரணை வெளியிட்டுள்ளது.

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ வழித்தடத்தை அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டது. கோயம்பேட்டில் தொடங்கி பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரை 19 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ வழித்தடத்தை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.

இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 21.7 கி.மீ. அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து பணிமனை சந்திப்பு, டன்லப், ஆவடி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமையவுள்ளன. திட்டச் செலவு மற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நேரத்தை மேம்படுத்துவதற்காக இந்த மூன்று இடங்களிலும் நெடுஞ்சாலை மேம்பாலத்துடன் மெட்ரோ வழித்தடங்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டம் தொடர்புடைய விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசிடம் கடந்த பிப்ரவரி 21-ல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் கோயம்பேடு முதல் பட்டாபிராம் (வெளிவட்டச் சாலை) வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in