தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)

தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர், அண்ணா, பெரியார் விருதுகள் அறிவிப்பு | TN Government |

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது, பாடலாசிரியர் யுகபாரதிக்கு பாரதிதாசன் விருது...
Published on

தமிழ்நாடு அரசின் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மொழிக்கும் பண்பாட்டுக்கும் தொண்டாற்றி வருபவர்களைக் கௌரவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களின் பெயரில் பொங்கல் பண்டிகையின்போது விருது வழங்கி வருகிறது. அதன்படி, 2026-க்கான திருவள்ளுவர் விருது, 2025-க்கான பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராசர் விருது, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க, கி.ஆ.பெ. விசுவநாதம், கலைஞர் உள்ளிட்டோர் பெயரிலான விருதுகளின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவள்ளுவர், அண்ணா, பெரியார் விருதுகள்

2026-க்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-க்கான அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வனுக்கும், காமராசர் விருது எஸ்.எம். இதயத்துல்லாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க. விருதுகள்

தமிழ்த்தொண்டு புரிவோருக்கான மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது பாடலாசிரியர் யுகபாரதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது வெ. இறையன்புவுக்கும், கி.ஆ.பே. விசுவநாதம் விருது முனைவர் செல்லப்பாவுவுக்கும் கலைஞர் விருது விடுதலை விரும்பிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் திருநாளில் கௌரவம்

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ. 5 லட்சம் , ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை திருவள்ளுவர் திருநாளான ஜனவரி 16 அன்று வழங்கப்படும். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கி கௌரவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Tamil Nadu Government announced list of Anna, Periyar, Thiruvalluvar, Bharathiyar, Bharathidasan awards

logo
Kizhakku News
kizhakkunews.in