
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாகக் கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஜன.19-ல் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதற்கு முந்தைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்துத் தவறான தகவல்களை கூறியதாக குற்றச்சாட்டினார்.
இந்நிலையில், இது தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று (ஜன.21) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
`தமிழக நிதி அமைச்சர் எனக்குப் பொருளாதார நிதி மேலாண்மை குறித்து அடிப்படை புரிதல் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து தெளிவாகக் குறிப்பிட்டேன். அப்போது அதற்கு அவர் சரியான விளக்கமளிக்கவில்லை.
நேற்றைய தினம் ஒரு மழுப்பலான பதிலை அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்கள் அரசு மீது மிகப்பெரிய குற்றச்சாட்டைத் தெரிவித்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதி மேலாண்மை சரி செய்யப்படும் எனத் தெரிவித்து, ஆட்சிக்கு வந்த 4 ஆண்டு காலத்தில் சுமார் 3 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறார்கள்.
திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாகி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. வேறு எந்த சாதனையும் இல்லை. 2020-2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பெட்ரோல், மது விற்பனை உள்ளிட்டவை மூலம் ரூ. 43,489 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
திமுக பொறுப்பேற்ற பிறகு 2024-2025-ம் ஆண்டில் பெட்ரோல், மது விற்பனை மூலம் ரூ. 69,588 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி, ஸ்டாம்ப் டூட்டி, கலால் வரி, வாகன வரி ஆகியவற்றில் அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அதிக வருவாய் கிடைத்துள்ளது. அதிக வருவாய் கிடைத்தும் கூட, அதையும் மீறி 3 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அப்படியென்றால் கடன் வாங்கப்பட்ட பணம் எங்கே சென்றது என்பதுதான் எங்கள் கேள்வி. ஐந்து ஆண்டு கால ஆட்சி முடிவுதற்குள் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைக்கவுள்ளது திமுக அரசு’ என்றார்.