
ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ச்சியாக வைத்து வரும் முழக்கம், கடந்த மாதம் அரசியல் களத்தில் பேசுபொருளானது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய், கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த முழக்கம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலப் பொதுச்செயலாளர் சரவணன் என்பவர் ஆட்சியில் பங்கு கோரி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
"தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தாங்கள் கூட்டணி ஆட்சிக்குத் தயார் எனப் பேசியுள்ளார்.
ஆகவே, தாங்கள் தற்போது நமது கூட்டணிக் கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும்.
தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணிக் கட்சிகள் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, தமிழக மக்களின் எண்ணத்தைத் தாங்கள் நிறைவேற்றி தமிழகத்துக்குத் தாங்கள் முன் உதாரணமாகத் திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.