கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க. ஸ்டாலினின் முழு உரை! | MK Stalin |

"தடை ஏற்படுத்தக்கூடிய சிலருக்கு பயத்தை வரவழைக்கணும். நிச்சயம் நம்முடைய திட்டங்களாலும் உங்குடைய சாதனைகளாலும் அது நடக்கும்."
கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க. ஸ்டாலினின் முழு உரை! | MK Stalin |
3 min read

படிப்புக்குத் துணையாக, வேலைவாய்ப்புகளை உருவாக்க தான் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவர்களிடத்தில் உரையாற்றியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் 2025-26 கல்வி ஆண்டுக்கானத் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள். திரைத் துறையிலிருந்து சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பிரேம்குமார், தியாகராஜா குமாரராஜா, மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

"இங்கு பேசிய மாணவர்களுடைய பேச்சைக் கேட்க கேட்க நான் ரொம்ப எமோஷனல் ஆயிட்டேன். காரணம், உங்களுடைய கருத்துகளைக் கேட்கும்போது நாம் உழைக்கிற உழைப்புக்கான பலன் நம் கண் முன்னாடியே தெரியும் என்று நான் இங்கே உணர்ந்திருக்கிறேன். அதற்காகப் பெருமைப்படுகிறேன்.

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முக்கியக் காரணம் எங்களைப் பாராட்டுவதற்காக அல்ல, எங்களைப் பாராட்டிக் கொள்வதற்காக அல்ல. இன்றைக்கு நாங்கள் உங்களைக் கொண்டாடுவதைப் பார்த்து அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு படிப்பு மேல் இன்னும் ஆர்வம் அதிகமாக வேண்டும். அதுதான் முக்கியம்.

தெலங்கானா முதல்வர் ரேவேந்த் ரெட்டி இந்த விழாவுக்கு வந்து நம்மையெல்லாம் பெருமைப்படுத்தி இருக்கிறார். நம்முடைய அரசோட மகளிர் பயணத் திட்டம் போலவே, தெலங்கானா மாநிலத்திலும் மகாலட்சுமி திட்டம் என்கிற பெயரில் பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து பயணத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்துகிற நல்ல திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த நாங்களும் தயாராக இருக்கிறோம். இதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி அரசியல்.

மாணவச் செல்வங்களே, நீங்கள் படித்து முன்னேறுகிற காரணத்தால் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்பமும் முன்னேறப் போகிறது. உங்களுடைய அடுத்த தலைமுறைக்கும் நீங்கள் கொண்டு சொல்லப்போகிறீர்கள். அந்தத் தலைமுறையும் முன்னேறப் போகிறது.

ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் கால் முளைத்த சதி இந்தச் சமூகத்தை ஆட்கொண்டதால் நம்முடைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்துக்கு எதிராகக் கலகம் செய்த புரட்சியாளர்கள் இருந்துட்டேதான் இருக்காங்க. அந்தத் தொடர்ச்சியோட உச்சமாக திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் நிகழ்த்தின புரட்சிதான் இன்னைக்கு இந்த அளவுக்கு வேகமாக நடைபெற காரணமாக இருக்கிறது.

அன்றைக்கு சென்னை மாகாணப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தினாங்க. தொடர்ந்து, காமராஜர் அவர்கள் தமிழ்நாடு முழுக்க பள்ளிகள் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லாரையும் எப்பாடுப்பட்டாவது பள்ளிகளுக்கு அழைத்து அவர்களைப் படிக்க வைக்கணும் என்கிற காரணத்திற்காகதான்.

அதுதான் படிப்படியாக வளர்ந்து இன்னைக்கு நம்ம திராவிட மாடல் அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய காலை உணவுத் திட்டம் உருவாகி இருக்கிறது. தொடக்கக் கல்வி முடிச்சிட்டு மேற்கல்விக்கு போகக்கூடிய மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகச் சட்டப்பேரவை உறுப்பினராக நான் முதல் முதலில் அவையில் எடுத்து வைத்த கோரிக்கையை ஏற்று இலவச பஸ் பாஸ் திட்டத்தை அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

அடுத்து தலைவர் கலைஞர் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கல்லூரி கல்விக்கு போக முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணம் இல்லை என்று சொன்னார். எல்லா சமூகத்தினருக்கும் கல்விச் சாலைகளில இடம் கிடைக்க இட ஒதுக்கீட்டை உயர்த்தினார். இப்படி ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம்.

இந்தப் பயணத்தை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போகத்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளாக புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாடல் ஸ்கூல்ஸ், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டுத் துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய திட்டங்கள் என்று ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

ஒருவேளை உணவு கொடுப்பதால், மாதம் ஆயிரம் ரூபாய் தருவதால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடுன்னு சிலர் நினைக்கலாம். காலை உணவுத் திட்டம் அறிமுகமானதிலிருந்து மாணவருடைய வருகை அதிகரித்துள்ளது. புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து பிளஸ் 2 படித்த மாணவர்களை 75 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கிறார்கள். குறிப்பாக பெண்கள் உயர்கல்வியில் சேர்வது அதிக அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அரசுப் பள்ளியில் பயின்ற 1,878 மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குப் படிக்கச் சென்றிருக்கிறார்கள்.

இன்று கல்வியில் தமிழ்நாடு பெற்றிருக்கக்கூடிய எழுச்சி இந்தியாவில் இருக்கக்கூடிய பல மாநிலங்கள் திரும்பிப் பார்க்கிறது. நம்முடைய திட்டங்களை அவர்களுடைய மாநிலங்களில் செயல்படுத்த ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த எழுச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் கல்விக்குத் தடை ஏற்படுத்தலாம் என்று ஒன்றியத்தில நினைக்கிறார்கள். நம்முடைய வளர்ச்சியைப் பார்த்து ஒதுக்க முடியாமல் தடை ஏற்படுத்தக்கூடிய சிலருக்கு பயத்தை வரவழைக்கணும். நிச்சயம் நம்முடைய திட்டங்களாலும் உங்குடைய சாதனைகளாலும் அது நடக்கும்.

என்னுடைய இலக்கு: அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி. கல்வி நிலையங்களுக்குள்ள எந்த காரணத்திலும் எவர் ஒருவரும் வராமல் இருக்கக் கூடாது, தடுக்கப்படக் கூடாது.

மாணவர்களான உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்: நம்ம அரசு உருவாக்கி தரக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக்கிட்டு உயர உயர பறக்கணும். அதைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடையணும்.

நீங்க இளநிலை முடித்துவிட்டு வேலைக்கு போனாலும், நல்ல வேலையில் உயர் நிலையை அடைந்திருந்தாலும் முதுநிலை படிப்பைப் படிக்க வேண்டும், ஆராய்ச்சி படிப்புக்கும் செல்ல வேண்டும்.

உலகம் மிகப் பெரியது. உங்களுடைய வெற்றி எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து படிங்க. உங்களுடைய படிப்புக்குத் துணையாக, உங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியிலே உயர்ந்த தமிழ்நாடாக மாறனும், மாறும், நிச்சயமாக மாற்றுவோம்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

MK Stalin | KalviyilSirandhaTamilNadu |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in