குடியரசுத் தலைவர் விவகாரம்: 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

"வெளிப்படையாக பாஜக இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், சட்டப்பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்துக்கு கடந்த 15 அன்று கடிதம் எழுதினார்

குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்றத்திடம் கேள்வியை எழுப்பியுள்ளதாக மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பிய கேள்விகள் குறித்து மேற்கு வங்கம், கர்நாடகம், ஹிமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, கேரளம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

"நமது அரசியலமைப்பின் பாதுகாவலராக, கூட்டாட்சி அமைப்புடன் கூடிய ஜனநாயகக் குடியரசை அடிப்படையாகக் கொண்ட நமது உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அரசியலமைப்பை சரியாக விளக்கியுள்ளது. ஆனால், வெளிப்படையாக பாஜக இந்தத் தீர்ப்பை சீர்குலைக்க முயற்சிக்கிறது. மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப் போக்கினைக் கடைபிடிக்கும் ஆளுநரை எதிர்கொள்ளும்போது, மற்ற மாநிலங்களுக்கும் இந்தத் தீர்ப்பினை ஒரு முன்னுதாரணமாகப் பயன்படுத்தலாம்.

ஆளுநர்களின் விவகாரத்தில் கேள்விக்குரிய பிரச்னை ஏற்கெனவே நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ தீர்ப்பால் முடிவு செய்யப்பட்டிருக்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்பைப் பயன்படுத்தவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது. ஆனாலும், பாஜக அரசு ஒரு பரிந்துரையைப் பெறுவதில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது அவர்களின் தீய நோக்கத்தைக் குறிக்கிறது.

இந்த முக்கியமான கட்டத்தில், கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநில சுயாட்சிக் கொள்கையையும் காத்திடும் நோக்கம் கொண்ட பாஜகவை எதிர்க்கும் மாநில அரசுகள், மாநிலக் கட்சித் தலைவர்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்கும் இந்தச் சட்டப் போராட்டத்தில் இணையும் நான் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தேன்.

உச்ச நீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்க வேண்டும். இந்த முக்கியமான பிரச்னையில் மேற்குறிப்பிடப்படுள்ள மாநில முதல்வர்களின் உடனடியாகத் தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்கியிருக்கிறேன்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in