குடும்ப கட்டுப்பாட்டைக் கடைபிடித்ததன் விளைவு...: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"நம்மைவிட அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கக்கூடிய திறமை எந்த நாட்டுக்கும் எந்த மாநிலத்துக்கும் கிடையாது."
குடும்ப கட்டுப்பாட்டைக் கடைபிடித்ததன் விளைவு...: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
1 min read

குடும்ப கட்டுப்பாட்டைக் கடைபிடித்ததன் விளைவு, நாடாளுமன்றத் தொகுதியைக் குறைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு குறித்த பார்வையையும் முன்வைத்தார்.

அவர் பேசியதாவது:

"மணமகள் மற்றும் மணமகன் பெயரைப் பார்க்கும்போது, எனக்குக் கொஞ்சம் சங்கடமாக உள்ளது. காரணம், தமிழ்ப் பெயர் இல்லை. இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். அதுதான் எனது அன்பான வேண்டுகோள்.

அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பது குடும்ப கட்டுப்பாட்டுக்கான பிரசாரம். அதை நாம் தொடர்ந்து கடைபிடித்ததன் காரணத்தால், இன்று தொகுதி மறுசீரமைப்பு வரும்போது, நாடாளுமன்றத் தொகுதியைக் குறைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இப்படி பார்த்தால் நாம் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கலாம். நம்மைவிட அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கக்கூடிய திறமை எந்த நாட்டுக்கும் எந்த மாநிலத்துக்கும் கிடையாது. ஏனென்றால், நாம் அனைவரும் தமிழர்கள்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

2026-ல் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்படும்பட்சத்தில் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைவதற்கான சூழல் உருவாகலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in