சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை: விரைவில் தீர்வு காண முதல்வர் அறிவுறுத்தல்

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையில் முதல்வர் தலையீட்டைக் கோரி இடதுசாரி தலைவர்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையில் விரைவில் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தைத் தொடங்கியுள்ளார்கள். இதற்கு தொழிற்சாலை நிர்வாகம் அங்கீகாரம் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, சுமார் 1,100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும், ஊதியம் உயர்த்தப்பட வேண்டும், போனஸ் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்கள். தொழிலாளர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்கள்.

தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி இடதுசாரிகள் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இடதுசாரி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எக்ஸ் தளப் பக்கத்தில், "சாம்சங் தொழிலாளர்களின் சங்க அங்கீகாரத்தை வலியுறுத்தியும், போராடும் தொழிலாளர்கள் விரும்பும் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தி - முதலமைச்சர் தலையீட்டை கோரி சென்னையில் இடதுசாரி கட்சி தலைவர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைவரையும் காவல் துறை கைது செய்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையில் விரைவில் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, தா.மோ. அன்பரசன், கணேசன் ஆகியோர் இதற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னதாக, தொழிலாளர் நலத் துறை சார்பில் 5 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவற்றில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in