உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம்; விசாரணை ஆணையம் அமைப்பு: முதல்வர் ஸ்டாலின் | Karur | TVK Vijay |

இதுவரை 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம்; விசாரணை ஆணையம் அமைப்பு: முதல்வர் ஸ்டாலின் | Karur | TVK Vijay |
ANI
1 min read

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன்.

விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளைத் துரிதப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த துயரகரமானச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும். நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்கவும் உள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Karur | Karur Stampede | Stampede |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in