
பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹென்னூரில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் கடந்த 22 அன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தார்கள். இருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கட்டடம் மழை காரணமாக சரிந்து விழுந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. அதேசமயம், கட்டுமானப் பணியில் குறைபாடு இருப்பதாகவும் நிறைய விதிமீறல் இருந்ததாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவருடையக் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்புடைய முதல்வரின் அறிவிப்பு:
"பெங்களூரு கட்டட விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காகச் சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
இருவருடையக் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட விபத்து தொடர்பாக, கட்டட உரிமையாளர் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.