தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் அக்டோபர் 8-ல் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி அமைச்சரவையில் மீண்டும் இணைக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி தவிர கோவி. செழியன் (புதுமுகம்), ஆர். ராஜேந்திரன் (புதுமுகம்), ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக இணைக்கப்பட்டார்கள்.
பால்வளத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கே. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்ட கே. ராமச்சந்திரன் அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்கள். அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 8 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.