தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்: தகவல்
ANI

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம்: தகவல்

அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27-ல் அமெரிக்கா செல்வதால் அதைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை மாற்ற அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது
Published on

இன்று (ஆகஸ்ட் 22) தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசில் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் மூத்த அமைச்சர்கள் சிலர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27-ல் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்வதால் அதைக் கருத்தில் கொண்டு இன்று தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

2021-ல் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை 7 மே, 2021-ல் பொறுப்பேற்றது. அதற்குப் பிறகு 14 டிசம்பர், 2022-ல் உதயநிதி ஸ்டாலினும், 11 மே, 2023-ல் டி.ஆர்.பி. ராஜாவும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கடந்த 11 மே 2023-ல் சா.மூ. நாசர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் வி. செந்தில் பாலாஜி 12 பிப்ரவரி 2024-ல் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இன்று நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in