தூய்மை பணியாளர்களுக்கு சிற்ப்புத் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்! | Sanitation Workers | Tamil Nadu

தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும்.
தூய்மை பணியாளர்களுக்கு சிற்ப்புத் திட்டங்கள்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்! | Sanitation Workers | Tamil Nadu
ANI
2 min read

மருத்துவ சிகிச்சை, இலவச காப்பீடு, தொழில் தொடங்க நிதியுதவி என தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக. 14) காலை நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,

`தூய்மைப் பணியாளர்களின் நல வாழ்வில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். 2007-ல் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான் தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் ஏற்படுத்தப்பட்டு, தூய்மை பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

அந்த நலவாரியத்திற்கு நிதி நல்கி, அது சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்து வந்துள்ளது. முதல்வருக்கு தூய்மை பணியாளர்கள் மீது கரிசனம் உள்ளது. இந்த சூழலில்தான் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

1)   தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது அவர்கள் பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறியவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனி திட்டம் செயல்படுத்தப்படும்.

2)   தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவியுடன் கூடுதலாக ரூ. 5 லட்சத்திற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால் பணியின்போது இறக்கும் தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் கிடைத்திட வழிவகை ஏற்படும்.

3)   தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்திட சுயதொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35% நிதி, அதிகப்பட்சமாக ரூ. 3.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். மேலும், இந்த கடனுதவியை பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையை தவறாமல் திருப்பி செலுத்துவதற்கு 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.

4)   தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும் அவர்களுக்கு உயர்கல்வியில் கட்டண சலுகை மட்டுமின்றி, விடுதிக் கட்டணம், புத்தக கட்டணத்திற்கான உதவித்தொகையை வழங்கிடும் வகையில் `புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம்’ ஒன்று செயல்படுத்தப்படும்.

5)   நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் 3 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் உதவியுடன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள், தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.

6)   தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் காலை உணவு சமைப்பதற்கும், அதை பணியிடங்களுக்குக் கொண்டுவந்து உண்பதற்கும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, தூய்மைப் பணியாளர்களுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.

இந்த 6 முக்கியமான அறிவிப்புகளை தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்காக தமிழ்நாடு முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்தார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in