சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை
படம்: https://x.com/BspArmstrong/

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரிலுள்ள சடையப்பன் தெருவில் இவர் வசித்து வருகிறார். இன்று மாலை தனது வீட்டு வாசலில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் ஆர்ம்ஸ்டிராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கிரீம்ஸ் சாலையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், இவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

இந்தக் கொலை தொடர்பாக கொளத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற இடம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2006-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு கவுன்சிலரானார். 2007-ல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அம்பேத்கர் கருத்தியலைப் பிரதிபலிக்கும் முக்கியமான குரலாகப் பிரபலமாக அறியப்படுகிறார்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதிக்கும், பகுஜன் சமாஜ் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை எக்ஸ் தளப் பதிவு:

"பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இன்று சென்னையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் தமிழ்நாடு பாஜகவினர் ஆறுதலாகத் துணை நிற்கிறோம்.

நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in