
கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து 13-வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்.16) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது,
`இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதற்கான மிகப்பெரிய எழுச்சி தெரிகிறது. அந்த எழுச்சியின் முடிவுகாலம் 2026-ல் வரும் என்று நம்புகிறேன். தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், போதை பொருள்களின் பயன்பாடு, சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.
காங்கிரஸ் கட்சி உலகத்திலேயே உள்ள மிகப்பெரிய ஊழல் கட்சி. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள திமுக, மாநில சுயாட்சி குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிராகப் பேசிய அமைச்சர் பொன்முடி மீது பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார்கள்’ என்றார்.
இதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.
தமிழகத்தைப் பொறுத்தளவில் அதிமுக தலைமையில் கூட்டணி இருந்தாலும், ஆட்சியில் பாஜகவுக்குப் பங்கு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அது தொடர்பான உங்கள் கருத்து?
உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாகப் பேசி முடிவெடுப்பார்கள்.
அன்றைக்கு அமித்ஷா பேசும்போது மிகத் தெளிவாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று கூறினார். அந்த கருத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி மாறுபட்டிருக்கிறார். எனவே அது குறித்துதான் உங்களிடம் கேட்கிறோம்?
கூட்டணி குறித்து எங்கள் அகில இந்தியத் தலைமைதான் பேசியது. எனவே இது குறித்து அவர்கள் நிச்சயமாகப் பேசுவார்கள்.
ஏற்கனவே மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தமிழகத்தில் 2026 தேர்தலுக்குப் பிறகு பாஜக இடம்பெறும் அமைச்சரவை அமையும் என்று கூறியிருந்தார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அந்த நிலையில் இருந்து அதிமுக மாறுபடுகிறதா?
அது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. எங்கள் உள்துறை அமைச்சர் அன்றைக்கு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அது தொடர்பாக அவர்களே பேசிக்கொள்வார்கள்.
ஆட்சியில் பாஜக இடம்பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கிறதா?
அது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது.