லட்டு பாவங்கள்: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக புகார்

"இந்த வீடியோ ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துவது மட்டுமின்றி, சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வை விதைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையைத் தூண்டுகிறது."
லட்டு பாவங்கள்: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக புகார்
2 min read

ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆந்திரப் பிரதேச காவல் துறை இயக்குநர் துவாரகா திருமலை ராவிடம் புகாரளித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதன்பிறகு, ஆய்வு முடிவில் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது.

இந்த சர்ச்சை நாடு முழுக்கப் பெரும் பூதாகரமாக வெடித்தது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், லட்டு குறித்து நடிகர் கார்த்தி பேசியதற்குக் கண்டனம் தெரிவித்தார். இதற்காக பவன் கல்யாணிடம் கார்த்தி மன்னிப்பு கேட்டார். இதுவும் பெரிதளவில் பேசுபொருளானது.

இவற்றுக்கு மத்தியில், இந்த விவகாரங்களை மையப்படுத்தி பரிதாபங்கள் யூடியூப் சேனல் பகடி செய்து வீடியோவை வெளியிட்டது. இதில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் குறித்தும் பகடி செய்திருந்தார்கள். இந்த வீடியோ வெளியானதிலிருந்து சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், வீடியோ வெளியான சில மணி நேரங்களில் இது நீக்கப்பட்டது.

"பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜாவின் ஒப்புதலின்படி, கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" பரிதாபங்கள் யூடியூப் சேனல் சார்பில் விளககம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக பாஜக சார்பில் ஆந்திர காவல் துறை இயக்குநரிடம் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

"லட்டு பாவங்கள் என்ற தலைப்பு கொண்ட மனதைப் புண்படுத்தக்கூடிய வீடியோவை வெளியிட்டதற்காக பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆந்திரப் பிரதேச காவல் துறை இயக்குநரிடம் முறைப்படி புகார் மனுவை அளித்துள்ளேன். வீடியோவை அவர்கள் நீக்கியிருந்தாலும்கூட, அந்த வீடியோவானது ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்துவது மட்டுமின்றி, சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வை விதைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னையைத் தூண்டுகிறது.

கூடுதலாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் உள்பட அரசுப் பொறுப்பில் உள்ளவர்களை இது இழிவுபடுத்துகிறது. இந்த மிக முக்கியமானப் பிரச்னையில் காவல் துறை இயக்குநர் விரைந்து நேர்மறையான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

இதுபோன்ற வெறுப்பு மற்றும் அவமதிப்புச் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் உறுதி கொள்ள வேண்டும்" என்று அமர்பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் புகார் மனுவைப் பதிவேற்றி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in