
போக்சோ வழக்கில், பாஜக பொருளாதாரப் பிரிவின் தலைவர் எம்.எஸ். ஷா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவின் பொருளாதாரப் பிரிவு தலைவர் பொறுப்பில் உள்ளார் எம்.எஸ். ஷா. இவருக்குச் சொந்தமாக மதுரை திருமங்கலத்தில், தனியார் கல்லூரி உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு எம்.எஸ். ஷாவுக்கு எதிராக 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை நகரத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் புகாரளித்தார்.
தனது மகளின் கைபேசி எண்ணுக்கு ஆபாச உரையாடல்களை அடிக்கடி எம்.எஸ். ஷா அனுப்பியதாகவும், மகளை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்து வெளியூர், உள்ளூர் விடுதிகளுக்கு அவர் அழைத்துச் சென்றதாகவும், இவை அனைத்திற்கும் தன் மனைவி உடந்தையாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் எம்.எஸ். ஷா மீதும் மாணவியின் தாய் மீதும், போக்சோ சட்டப் பிரிவுகள் 11(1), 11(4) மற்றும் 12 ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மீதான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் போதிய முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் எம்.எஸ். ஷாவிடம் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவுபெற்றதும் எம்.எஸ். ஷா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.