ஜூன் 20-ல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அப்பாவு அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ஜூன் 24-க்கு பதில் முன்கூட்டியே சட்டப்பேரவை கூடுகிறது.
ஜூன் 20-ல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அப்பாவு அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், ஜூன் 24-ல் தொடங்கவிருந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 20 அன்று தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு கூறியதாவது:

"சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 24 அன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவித்திருந்தேன். இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வந்ததால், ஜூன் 24-ல் தொடங்கவிருந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், முன்கூட்டியே ஜூன் 20 அன்று காலை 10 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் என்ற உறுப்பினர் நாளை காலை 11 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் அறையில் பதவியேற்றுக் கொள்கிறார். நான் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறேன்.

இதைத் தொடர்ந்து, நண்பகல் 12 மணியளவில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை 20-ம் தேதி முதல் எத்தனை நாள்களுக்கு வைத்துக்கொள்ளலாம், எந்தெந்த தேதியில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் வைத்துக்கொள்ளலாம் என்பது தீர்மானிக்கப்படவுள்ளது" என்றார் அப்பாவு.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ல் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுக்க காலியாக உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று இடைத்தேர்தல் அறிவித்தது. இதில் விக்கிரவாண்டியும் அடக்கம்.

விக்கிரவாண்டிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூலை 13-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in