சாதிவாரிக் கணக்கெடுப்பு: முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சாதிவாரிக் கணக்கெடுப்பு: முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணியளவில் கூடியது. கேள்வி நேரம் முடிவடைந்தவுடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

"பாமக உறுப்பினர் மணி பேசும்போது, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நூறாண்டுகளுக்கு மேலாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது.

புள்ளிவிவரச் சட்ட 2008-ன் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம். இந்தச் சட்டத்தின்படி மாநில அரசு சமூகப் பொருளாதார புள்ளி விவரங்களைச் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதே சட்டத்தின் பிரிவு 3 உட்பிரிவு அ-ன் படி இனங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது. இந்தச் சட்டத்தின் பிரிவு 32-ன் படி மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1942-க் கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள்தொகை தொடர்பான புள்ளி விவரங்களைச் சேகரிக்க முடியாது என்பது மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை 2021-ல் மேற்கொள்ளாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இதைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். நடப்பு கூட்டத்தொடர் முடிவடையும் வரை அவை நடவடிக்கைகளில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கக் தடை விதித்து, அவர்களை இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார். 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறி பாமக உறுப்பினர்களும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in