
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஜூலை 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்கள். சுமார் 300 படகுகள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றுள்ளன. இதில் 8 மீனவர்கள் மற்றும் IND-TN-10-MM-773 பதிவு எண் கொண்ட தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகு இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்குக் கடிதம் எழுதினார்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 8 பேரும் மன்னார் நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். இவர்கள் அனைவரையும் ஜூலை 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மீனவர்கள் 8 பேரும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
மீனவ சங்கங்கள் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளன. மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சேசு (39), அண்ணாமலை (55), கல்யாணராமன் (48), சையது இப்ராஹிம் (35), முனீஸ்வரன் (35), செல்வம் (28), காந்திவேக் (67), பாலமுருகன் (24) எனத் தெரியவந்துள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு அனுப்பிய கடிதத்தில், "வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து, மீன்பிடிப் பருவம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், நமது மீனவர்கள் வாழ்வாதாரம் ஈட்டும் நம்பிக்கையுடன் மீன்பிடிக்கக் கடலுக்குத் திரும்பியுள்ளார்கள். மீன்பிடி தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வதில் கட்டுப்பாட்டு மற்றும் பரஸ்பர புரிதலை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.