
தமிழக அரசுத் துறைகளால் இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியிடப்படவேண்டும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அலுவல்முறை நோக்கங்களில் தமிழைப் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் 1956-ல் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே. ராஜாராமன், தமிழக அரசின் பிற துறைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது,
`தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் மொழியை பயன்படுத்தவும், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படவேண்டும்.
சிற்றாணைக் குறிப்புகளும் தமிழிலேயே இருக்கவேண்டும். துறையின் தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்கவேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடித போக்குவரத்துகள் ஆகியவை (விலக்கு அளிக்கப்பட்ட இனங்கள் தவிர) தமிழில்தான் மேற்கொள்ளவேண்டும்.
பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதோடு, அவை பற்றிய குறிப்புகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிடவேண்டும்.
மேலும், ஆங்கிலத்தில் வெளியிட விலக்கு அளிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கு ஏற்ப தலைமைச் செயலக துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில் வெளியிடுவதற்கு வசதியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையினை மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்ய அனுப்பப்படவேண்டும்
அல்லது, அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்பட்டால் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பவேண்டும்’ என்றார்.