லண்டனில் அரங்கேற்றிய தனது முதல் சிம்பொனி இசை, 13 நாடுகளில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது முதல் மேற்கத்திய கிளாசிகல் சிம்பொனியை மார்ச் 8 அன்று லண்டனிலுள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய இளையராஜா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறியதாவது:
"மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியனுப்பி வைத்தீர்கள். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தான். இது சாதாரண விஷயம் அல்ல.
இசைக்கான குறிப்பை எழுதிவிடலாம். அதை எழுதி கொடுத்தால், அவர்கள் வாசித்துவிடலாம். ஆனால், ஒவ்வொருவரும் வேறுவேறாக இசைத்தால், அந்த இசை எப்படி இருக்கும்?
அதை கண்டக்டர் மிகெல் டாம்ஸ் என்பவர், நான் எழுதிய ஒவ்வொரு குறிப்பையும் உன்னிப்பாக ஒத்திகை செய்து பார்த்தார். நான் லண்டன் சென்றவுடனே அவர்களுடைய ஒத்திகையில் பங்கேற்கதான் நேரம் இருந்தது. அது மிகவும் முக்கியமான விஷயம்.
சிம்பொனியை அரங்கேற்றும்போது எந்தவிதமான விதியையும் மீறக் கூடாது. எனவே, அவர் மிகச் சிறப்பாக 80 இசைக் கலைஞர்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் கைகளை அசைக்கும்போது அமைதி நிலவும்.
அனைவரும் ஒரு சுரம் மட்டும் வாசிக்கிறார்கள் எனில், அந்த ஒரு சுரத்தை கையைக் காட்டி அப்படி வாசிக்கும்போது எல்லோருடைய கவனமும் அந்த ஓர் இசைக் குறிப்பில் இருக்கும். அவர்கள் வாசிக்கும்போது கேட்கிறவர்கள் மூச்சுவிட மறந்துவிடுவார்கள். ஒரு சுரத்துக்கு இந்தக் கதி என்றால், சிம்பொனி முழுக்கவும் நான்கு பகுதிகளைக் கொண்டது.
மேற்கத்திய இசையைப் பொறுத்த வரை நான்கு பகுதிகள் முழுமையாக முடியும் வரை யாரும் கைத்தட்ட மாட்டார்கள். கைத்தட்டக் கூடாது, அது விதிமுறை. ஆனால், நமது ரசிகர்கள், வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் முதல் பகுதி முடிந்தவுடனே கைத்தட்டினார்கள். அங்கு வாசிக்கும் அனைவருக்கும் ஆச்சர்யம். எல்லோருக்கும் ஆச்சர்யம். அனைவரும் என்னைப் பார்க்கிறார்கள். கண்டக்டர் என்னைப் பார்த்து சிரிக்கிறார்.
இப்படி ஒவ்வொரு இசைப் பகுதிக்கு கைத்தட்டி, பாராட்டைக் கொட்டித் தீர்த்தார்கள். அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இசை அமைப்பைக் கேட்டுவிட்டு, அவர்களால் தாங்க முடியவில்லை. அப்போது ரசித்ததை, நம் மக்கள் அப்போதே வெளிப்படுத்தினார்கள். அந்நேரத்தில் அவர்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்த முடியும்?. கரகோஷங்களை எழுப்பிதான் வெளிப்படுத்த முடியும்.
இது எல்லா இசை வல்லுநர்களாலும் பாராட்டப்பட்ட ஒரு சிம்பொனி. தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாக மாற்றம் எடுத்திருப்பது இறைவனின் அருள். முதல்வர் அரசு மரியாதையோடு என்னை வரவேற்றிருப்பது நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
முதல்வர் அரசு மரியாதையோடு வரவேற்றதைப்போலவே தமிழக மக்கள் அனைவரும் என்னை வரவேற்பது மிகவும் பெருமையாக உள்ளது.
இந்த இசையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கேட்கக் கூடாது. இதை நீங்கள் நேரடியாகக் கேட்க வேண்டும். என்னுடைய மக்களுக்கு நேரடியாக நான் இசைத்து.. அந்த அனுபவம் என்பது வேறு... 80 வாத்தியக் கருவிகளும் அப்படியே கேட்கும். மற்ற ஒலிப்பதிவில் 80 வாத்தியக் கருவிகளும் கேட்குமா? கேட்காது.
அரங்கேற்றத்தில் இரண்டாவது பகுதியில் என்னுடையப் பாடல்களை, அவர்களைக் கொண்டு வாசிக்க வைத்து, நம் சினிமா பாடல்களைப் பாட வைத்து, நானும் ஒரு பாடலை அவர்களுடன் பாடினேன். அதுவும் மிகவும் கடினமாக காரியம். காரணம், அவர்களுடன் பாடி எனக்குப் பழக்கம் கிடையாது.
இந்த சிம்பொனி இசை 13 நாடுகளில் நடத்தவிருப்பதற்கு நாட்கள் குறித்தாகிவிட்டது. அக்டோபர் 6 துபாய், செப்டம்பர் 6 பாரிஸ் என எல்லா நாடுகளிலும் இந்த சிம்பொனி இசை சென்றடையவுள்ளது. தமிழர்கள் இல்லாத பகுதிகளிலும் இதை அரங்கேற்றுவதற்கு விளம்பரதாரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
நம் நாட்டில் நம் மக்களைக் கேட்க வைக்க வேண்டாமா? எல்லோரும் கேட்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும். அந்தத் தருணத்தை, அந்த இடத்திலிருந்து அவர்கள் கைகளைக் காட்டுவதிலும் நீங்கள் அதை அமைதியாக ரசிப்பதும் தான்.... இசை உலகில், இசை பாரம்பரியத்தில் இது மிகவும் உச்சகட்டமான விஷயம்.
என்னைப் பற்றி எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது. என்னை இசை தெய்வம், கடவுள் என்று சொல்லும்போது, கடவுளை இளையராஜா அளவுக்குக் கீழே இறக்கிவிட்டீர்களே என்றுதான் தோன்றும்.
உங்களுடைய மலர்ந்த முகங்கள் என்னை வரவேற்றதற்கு மிகவும் நன்றி. இந்த இசை உலகெங்கும் கொண்டு செல்லப்படும். இதோடு நிற்கப்போதவில்லை. இது ஆரம்பம்தான். 82 வயதாகிவிட்டது இனி என்ன செய்யப்போகிறார் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் நினைக்கும் அளவுகோலில் நான் இல்லை.
பண்ணைப்புரத்திலிருந்து புறப்படும்போது வெறுங்காலில் நடந்தேன். என்னுடையக் காலில் நடந்துதான், நான் இந்த இடத்தை அடைந்துள்ளேன். இளைஞர்கள் இதை உணர வேண்டும். அவர்களும் அவர்களுடைய வாழ்க்கையில் இதை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு அவரவர் துறையில் அவர்கள் மென்மேலும் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் என் அறிவுரை" என்றார் இளையராஜா.