இனி முதல்வரின் பின்னால் அணி வகுப்பேன்: எஸ்.வி. சேகர் | S.Ve. Shekher |

அரசியலில் விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும்...
இனி முதல்வரின் பின்னால் அணி வகுப்பேன்: எஸ்.வி. சேகர் | S.Ve. Shekher |
https://x.com/SVESHEKHER
2 min read

இனி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குப் பின்னால் அணி வகுப்பேன் என்று எஸ்.வி. சேக்ர் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகரின் வீடு உள்ள தெருவுக்கு அவரது தந்தை எஸ்.வி. வெங்கட்ராமன் பெயரைச் சூட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து பெயர் பலைகை இன்று திறந்து வைத்தார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.வி. சேகர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

”என் அப்பா எஸ்.வி. வெங்கட்ராமன் சமூக சேவகர். நாங்கள் 1958-ல் இருந்து வசிக்கும் மந்தைவெளி பகுதியில் உள்ள எங்கள் தெருவுக்கு என் அப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அதை உடனே ஏற்றுக் கொண்டு தற்போது எங்கள் தெருவுக்கு எஸ்.வி. வெங்கட்ராமன் தெரு என்று பெயர் சூட்டியிருக்கிறார். இது என் தந்தைக்கும் என் குடும்பத்திற்கும் கிடைத்த வாழ்நாள் கௌரவம்.

திமுக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர் என்று கூறுவார்கள். அது அரசியலுக்காகக் கூறப்படும் வார்த்தை. எப்போது எல்லாருக்குமான முதல்வராக அவர் இருப்பேன் என்று சொல்லத் தொடங்கினாரோ, அப்போதிலிருந்து அப்படித்தான் இருந்து வருகிறார். நமக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. இனி என்றுமே என் அருமை நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பேன். அதை என் வாழ்நாள் நன்றிக் கடனாகப் பார்க்கிறேன். இனி திமுகவுக்கு ஆதரவாக நான் இருப்பேன்.

எம்ஜிஆர் 20 ஆண்டுகள் திமுகவில் இருந்து, திமுகவுக்காக உழைத்து, அவருக்குத் திமுக ஒத்துழைத்து அதன் பின் வந்த மனக்கசப்பு காரணமாகத் தனியாக வந்தார். எம்ஜிஆர் ஏதோ சினிமாவில் டூயெட் பாடிவிட்டு நேரடியாக வந்து கட்சி தொடங்கிவிடவில்லை. அப்படி விஜய் நினைத்துக்கொண்டால் பாவம் அவருக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். கூட்டம் வாக்குகளாக மாறாது. தமிழ்நாடு அரசு நடத்தும் பொருட்காட்சிக்கு வராத கூட்டமா? திருச்சியில் வந்த கூட்டம் விஜய்க்கு நாமக்கல்லில் வரவில்லையே. மனப்பாடம் செய்துகொண்டு 3 நிமிடங்கள் பேசும்போதே அங்கிள் அங்கிள் என்றெல்லாம் பேசுவது சினிமாவில் கைத்தட்டல் பெற உதவும், மக்களிடம் போகாது.

மக்களிடம் போகவேண்டும் என்றால் விஜய்யின் அலைபேசி எண்களைக் கொடுங்கள். யார் வேண்டுமானாலும் அழைத்துக் குறைகளைச் சொல்லலாம் என்று சொல்லவிடுங்கள். விஜய்க்கு எழுதிக் கொடுப்பவரும் தப்பும் தவறுமாகவே எழுதிக் கொடுக்கிறார்கள். விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும். அவருக்கு அரசியலில் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு இன்னும் 15-20 ஆண்டுகள் உழைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் மட்டும் வந்துவிட்டுப் போனால் சரியாக வராது. ஏனென்றால் அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்ய வேண்டிய சேவை. இப்போது தான் ஒரு வண்டியில் இருந்து இறங்கி, இன்னொரு வண்டியின் மீது ஏறிப் பேசத் தொடங்கியிருக்கிறார். அரசியல் என்பதும் தேர்தல் என்பதும் என்ன என்பதை 2026 தேர்தல் விஜய்க்குப் புரிய வைக்கும்.”

என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in