அஜித்குமார் மரண வழக்கு: நகை திருட்டு குறித்து புகார் அளித்தவர் விளக்கம்!

கோயில் அலுவலகத்தில் அழைத்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். எங்களிடம் ரூ. 500 கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
அஜித்குமார் மரண வழக்கு: நகை திருட்டு குறித்து புகார் அளித்தவர் விளக்கம்!
2 min read

திருப்புவனம் காவல் நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமார் மீது சந்தேகம் உள்ளதாக, அவர் மீது நகை திருட்டு புகார் அளித்தவர் குற்றம்சாட்டிப் பேசும் காணொளி வெளியாகியுள்ளது.

நகை திருட்டு புகாரின்பேரில் கடந்த ஜூன் 28 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரையைச் சேர்ந்த நிகிதா என்ற பெண், அன்று (ஜூன் 28) மாலை காவல்நிலையத்தில் அமர்ந்தபடி திருட்டு சம்பவம் தொடர்பாக பேசும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அவர் பேசியதாவது,

`மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து மடப்புரம் காளி கோயிலுக்கு தரிசனம் மேற்கொள்ள வந்தோம். எனது தாயாருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லை. இதனால் அவருக்கு ஸ்கேன் எடுக்குமாறு கூறியிருந்தனர். ஸ்கேன் எடுக்கச் சென்றபோது அவரது நகைகளைக் கழற்றிப் பையில் வைத்து, அதை காரின் பின்னிருக்கையில் வைத்தோம்.

திடீரென்று, மடப்புரம் காளியை பார்த்த பிறகே ஸ்கேன் எடுக்க ஒத்துக்கொள்வேன் என்று அவர் கூறினார். அதனால் அப்படியே காளி கோயிலுக்கு வந்தோம். அங்கிருந்த கோயில் பணியாளர் ஒருவரிடம் அம்மாவுக்காக சக்கர நாற்காலி கேட்டேன். எங்களுக்கு சக்கர நாற்காலியை வழங்கிவிட்டு, காரை நிறுத்திவிட்டு வருவதாகக் கூறி அவர் சாவியை வாங்கிச் சென்றார்.

அம்மாவுடன் கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ளச் சென்றேன். நீண்ட நேரம் கழித்தே அவர் சாவியை என்னிடம் அளித்தார். காரை எடுத்து வந்து தருமாறு அவரிடம் கேட்டேன். அவரும் வண்டியை எடுத்துக்கொண்டு வந்து தரவே, நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

சிறிது தூரம் சென்ற பிறகு அம்மாவிடம் சாப்பிடுமாறு கூறினேன். அதன்பிறகு நகை போட்டுக்கொள்ள அவரிடம் சொல்லி, பின் சீட்டை திரும்பிப் பார்த்தேன், அந்த பை திறந்து கிடந்தது. அதில் நகைகள் எதுவுமே இல்லை. திரும்பி கோயிலுக்கு வந்து, அலுவலகத்தில் புகாரளித்தேன். எங்களுக்கு போதிய ஒத்துழைப்பை அளித்தனர்.

அதன்பிறகு மதியம் 2 மணியளவில் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு வந்தோம். இப்போது வரை இங்குதான் இருக்கிறோம். எங்களை அழைத்து வந்தனர், ஆனால் என்ன நடந்தது என்று கேட்கவில்லை. ஆய்வாளர் வருவதாகக் கூறி, எங்களை காத்திருக்கச் சொன்னார்கள்.

அந்தப் பையன் அஜித், தற்காலிகப் பணியாளர் என்று கூறினார்கள். அவரை அழைத்து வந்து நாங்களே இங்கு ஒப்படைத்தோம். கோயில் அலுவலகத்தில் இருந்து ஒரு பணியாளர் வந்து எங்களுடன் இருக்கிறார். அந்த நகையை எப்படியாவது மீட்டுக்கொடுக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் நாங்கள் நீண்ட தூரம் பயணிக்கவேண்டும். அம்மாவின் உடல்நிலை மோசமாக உள்ளது. இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. புகார் அளித்திருக்கோம், ஆனால் அதற்கான சி.எஸ்.ஆர். எங்களுக்குத் தரவில்லை. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

புகாரை நாங்கள் எழுதி வழங்கியிருக்கிறோம். அதற்கான மேல் நடவடிக்கை குறித்து எதுவும் தெரியாமல் ஆய்வாளருக்காக நாங்கள் காத்திருக்கிறோம். செயின், வளையல், மோதிரம் என 10 பவுன் நகை இருந்தது. அந்த கோயில் பணியாளர் (அஜித் குமார்) மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

அவர்தான் காரை எடுத்துச் சென்றார். கோயில் அலுவலகத்தில் அழைத்து விசாரித்தபோது அவர் நிறைய முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். எங்களிடம் ரூ. 500 கேட்டு அவர் தகராறில் ஈடுபட்டார். சக்கர நாற்காலியை கொண்டு வந்ததாகவும், ஐந்து பணியாளர்கள் இருப்பதாகவும் கூறி ரூ. 500 கேட்டார்.

ஆனால் நான் ரூ. 100 கொடுத்தேன். உடனே அவரது நண்பருக்கு கைபேசியில் அழைத்து ரூ. 500 பெற்றதாகவும், அதை ஜிபேவில் அனுப்புவதாகவும் அவர் கூறினார். அவரது நண்பர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in