திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2006-2011 திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தங்கள் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாகக் கூறி அவர்கள் இருவர் மீதும் கடந்த 2011-ல் சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.
10 வருடங்களுக்கும் மேலாக நடந்த இந்த சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து கடந்த 2022-ல் தங்கம் தென்னரசுவும், ஜூன் 2023-ல் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் விடுவிக்கப்பட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் குறித்துத் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க ஸ்ரீ வில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஆகஸ்ட் 7-ல் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் திமுக அமைச்சர்கள். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை இன்று (செப்.06) உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு மேற்கொண்டது.
இந்த விசாரணையில், `தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை கீழமை நீதிமன்றம் முடித்து வைத்ததுக்கான இறுதி அறிக்கையை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை, மேலும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஆகியோர் தொடர்பான வழக்குகளை இரண்டு நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வுதான் விசாரித்திருக்க வேண்டும்’ என திமுக அமைச்சர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
இதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் இடைக்காலத் தடை விதித்தார்.