
அண்ணா பல்கலைக். விவகாரத்தில் காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்குத் தடை பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்
கடந்தாண்டு டிசம்பரில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவி ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை ஏற்பட்ட விவகாரத்தில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கு தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருந்தபோது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய சென்னை காவல் ஆணையர் அருண் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது தமிழக அரசு.
இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று (ஜன.27) நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரினார் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்.
அதற்கு, `அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆரை வெளியிட்டது யார்? எஃப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எனக் கேள்விகளை எழுப்பியது உச்ச நீதிமன்ற அமர்வு.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், `மாணவியை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்க காவல்துறை தயாராக இருந்தது. மத்திய அரசின் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் கோளாறுக்கு காவல்துறை அதிகாரியால் என்ன செய்ய முடியும்?’ என்றார்.
இதனை அடுத்து, `மாணவியின் தரவுகள் தற்போதும் சமூக வலைதளங்களில் உள்ளனவா? எவ்வளவு நேரத்திற்கு அந்த ஆவணம் பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்தது?’ என மேலும் பல கேள்விகளை எழுப்பியது உச்ச நீதிமன்ற அமர்வு. இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.
விசாரணைக்குப் பிறகு, சென்னை காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்குத் தடை பிறப்பித்தது உச்ச நீதிமன்ற அமர்வு. அதேநேரம், அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு எந்த தடையும் இல்லை என அறிவித்தது உச்ச நீதிமன்ற அமர்வு.