
மத்திய அரசிடம் இருந்த வரவேண்டிய ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2020 தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான மும்மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மறுத்துவிட்டது. இதன் வெளிப்பாடாக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் தமிழகத்திற்குச் சேரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலுவைத் தொகையை 6% வட்டியுடன் சேர்த்து, ரூ. 2291 கோடியாக விடுவிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
`அனைவருக்கும் கல்வி இயக்கம் (சமக்ர சிக் ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.) திட்டத்தின் கீழ் நிதி பெறும் மாநிலத்தின் உரிமையை மத்திய அரசு தடுத்துள்ளது; கல்வி நிதியை நிறுத்துவது, கல்வி தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை அபகரிப்பதற்கு சமம்’ என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் அமர்வு முன்னிலையில் இன்று (ஜூன் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது 2024-ம் ஆண்டு மற்றும் நடப்பாண்டிற்கான மத்திய நிதி நிறுத்தி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.
விசாரணையின்போது, `எந்த அவசரமும் இல்லை, பகுதி வேலை நாட்களுக்குப் (கோடை கால விடுமுறையின் புதிய பெயர்) பிறகு இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்தி வைத்தது.