
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதை வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. சோதனைகளின்போது மின்னணு சாதனங்களைத் தேடுவதற்கு எதிரான வழிகாட்டுதல்களைக் கோரும் சில மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட இந்த வாதத்திற்கு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, இந்த விவகாரத்தை தமிழக அரசு எழுப்பவில்லை என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறட்டும் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தமிழக அரசு தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டது.