
ஏடிஜிபி ஜெயராமைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராமின் கார் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்புடைய வழக்கில் ஏடிஜிபி ஜெயராமைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 16 அன்று கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமன் ஜூன் 17 அன்று மாலை விடுவிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் கைது உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஏடிஜிபி ஜெயராமன்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயன் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஜெயராம் விசாரணைக்கு ஒத்துழைப்பதால் அவரைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்வது அவசியமானது தானா என்று மாநில அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
அரசுத் தரப்பில் வாதிடுகையில், ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது. ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி புயன், "நீங்கள் இதைச் செய்யக் கூடாது. இது மனநிலையை மிகவும் பாதிக்கும்" என்றார். 28 ஆண்டு காலம் பணி அனுபவம் பெற்றவர் அவர் என்று மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தெரிவித்தார். அவர் விசாரணைக்கு ஆஜராகும்போது எதற்காக அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. மேலும், அவருடைய இடைநீக்கத்தைத் திரும்பப் பெறுவதற்கான உரிய வழிகாட்டுதல்களைப் பெறுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏடிஜிபி ஜெயராமைக் கைது செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்தும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தார்கள். உச்ச நீதிமன்ற நீதிபதி புயன் கூறுகையில், "இதுமாதிரியான உத்தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன" என்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி மன்மோகன் யதார்த்தமாகக் கூறுகையில்,"18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். இப்படியொரு அதிகாரம் எனக்கு இருக்கிறது என்பதே எனக்குத் தெரியாது" என்றார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
வழக்கு விவரம்:
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்குச் சாதகமாக இளைஞரின் சகோதரர் கடத்தப்பட்டதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி. குப்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. இளைஞரைக் கடத்துவதற்கு ஏடிஜிபி ஜெயராமின் கார் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
காவல் துறை இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவானதாகச் செய்திகள் வெளியாகின. இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோரை நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் நேரில் ஆஜரானார்கள்.
ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏடிஜிபி ஜெயராமைக் கைது செய்து காவல் துறை பாதுகாப்பில் வைக்க உத்தரவிட்டது.