
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணை அமர்வை அமைக்க வேண்டும் எனவும், சிறப்பு புலனாய்வுக் குழு வாரம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று (நவ.18) உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் பெற்றோர், கடந்த ஆகஸ்ட் 30-ல் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த போக்சோ வழக்கை மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ) விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு காவல்துறை.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததுடன், இந்த போக்சோ வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டி.ஐ.ஜி. சுரேஷ்குமார் தாக்கூர் தலைமையில் 2 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து வாரம் ஒரு முறை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும், சிறப்பு புலனாய்வுக் குழு தினந்தோறும் வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்பாடு மேற்கொள்ளவேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் இன்று (நவ.18) உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த போக்சோ வழக்கு விசாரணை தொடர்பாக, சிறப்பு விசாரணை அமர்வை அமைக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.