சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், கடந்த வருடம் ஜூன் 14-ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தொடர்ச்சியாக மனுத் தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. ஆனால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஒரு வருடத்துக்கும் மேலாக புழல் சிறையில் உள்ளார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்புகளின் வாதங்கள் நிறைவடைந்த பிறகு, இன்று (செப்.26) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது உச்ச நீதிமன்றம்.
அதன்படி இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.