
தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் குடியரசுத் தலைவரின் ஓப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் நேரடியாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உட்பட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இன்று (ஏப்ரல் 8) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், `2-வது முறையாக நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கவேண்டும்; அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம்; மசோதாக்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்’ என்று தீர்ப்பில் குறிப்பிட்டது.
அதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.
உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட 10 மசோதாக்கள் பட்டியல்:
பதினைந்தாவது சட்டப்பேரவையில் 8.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 9.1.2020 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, 2020-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 2/2020)
9.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, 2020-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 12/2020)
பதினாறாவது சட்டப்பேரவையில், 25.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 24/2022)
5.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 10.5.2022 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 29/2022)
9.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 10.5.2022 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 39/2022)
10.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 40/2022)
18.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 19.10.2022 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 48/2022)
19.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 55/2022)
19.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 15/2023)
20.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023 அன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 18/2023)