மாறன் சகோதரர்களுக்கு இடையே மோதலா?: சன் டிவி நெட்வொர்க் மறுப்பு

நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு முன்பு சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களால் அவை முறையாக சரிபார்க்கப்பட்டுள்ளன.
தயாநிதி மாறன் - கோப்புப்படம்
தயாநிதி மாறன் - கோப்புப்படம்ANI
2 min read

சன் டிவி நெட்வொர்க் பங்குகளை முன்வைத்து முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் தன் மூத்த சகோதரர் கலாநிதி மாறனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான செய்திகளில் கூறப்பட்டிருந்த குற்றச்ச்சாட்டுகளுக்கு சன் டிவி நெட்வொர்க் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இயக்கும் சன் டிவி நெட்வொர்க்கின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கலாநிதி மாறன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தங்கள் தந்தை முரசொலி மாறனின் மறைவைத் தொடர்ந்து, சன் டிவி நெட்வொர்க்கை முழுமையாக கைப்பற்றிக்கொண்டதாக கலாநிதி மாறன் மீது அவரது தம்பி தயாநிதி மாறன், வழக்கறிஞர் நோட்டீஸ் மூலம் சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்ததாக நேற்று (ஜூன் 19) முதல் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.

ஜூன் 10-ம் தேதியிட்ட வழக்கறிஞர் நோட்டீஸில் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன், ரவி ராமமூர்த்தி, நடராஜன், சிவசுப்பிரமணியன் (பட்டயக் கணக்காளர்), ஸ்ரீதர் சுவாமிநாதன் (நிதி ஆலோசகர்), சுவாமிநாதன் மற்றும் ஷரத் குமார் ஆகிய 8 பேர் மீது வழக்கறிஞர் நோட்டீஸ் மூலம் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தயாநிதி மாறன் வழக்கறிஞரால் விடுக்கப்பட்ட நோட்டீஸில்,

`குடும்பத்தின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, குறிப்பாக எனது கட்சிக்காரரின் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது, அதாவது ​​அவர் எந்த நேரத்திலும் இறக்கக்கூடும் என்ற நிலையில், அவரது உடல்நலம் மோசமடைவது குறித்து முழு குடும்பமும் கவலைப்பட்டபோது, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட மோசடித் திட்டத்தை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, ​​(கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி) செப்டம்பர் 2003-ல் முதல் சட்டவிரோத நடவடிக்கையைத் தொடங்கினார்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

செப்டம்பர் 15, 2003 அன்று, அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு முரசொலி மாறன் அழைத்து வரப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அன்றைய சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில் தலா ரூ. 10 மதிப்பில் 12 லட்சம் பங்குகளை கலாநிதி மாறன் தனக்கு ஒதுக்கிக்கொண்டதாக வழக்கறிஞர் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ. 2,500 முதல் ரூ.3,000 வரை இருந்தபோது, நிர்வாகக் குழு அல்லது பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது என்றும் நோட்டீஸில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கையின் மூலம், சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தில் கலாநிதி மாறனுக்கு ஒரே இரவில் 60% பங்குகள் கிடைத்ததாகவும், நிறுவனத்தின் அசல் உரிமையாளர்களான முரசொலி மாறன் மற்றும் கருணாநிதி குடும்பத்தினரின் பங்குகள் தலா 50%-ல் இருந்து 20% ஆகக் குறைந்ததாகவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் பங்குகளின் நியாயமான சந்தை மதிப்பின்படி, இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு ரூ. 3,500 கோடிக்கு மேல் இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால் இதற்காக கலாநிதி மாறன் ரூ. 1.2 கோடியை மட்டுமே நிறுவனத்திற்கு செலுத்தியதாகவும் நோட்டீஸில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செய்தி ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுகளை சன் டிவி நெட்வொர்க் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம், 22 ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவி நெட்வொர்க் தனியார் நிறுவனமாக இருந்தபோது ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

`செய்திகளில் கூறப்படும் தகவல்கள் தவறானவை, தவறாக வழிநடத்தும் வகையிலும், ஊகத்தைத் தூண்டும் நோக்கத்திலும் உள்ளன. அவை அவதூறானவை. அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்பூர்வமாக, விதிகளை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டன.

நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு முன்பு சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களால் அவை முறையாக சரிபார்க்கப்பட்டுள்ளன என்பதையும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்," என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in