அவதூறு வழக்கில் வரும் செப்டம்பர் 9-ல் ஆஜராகுமாறு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது எம்.பி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்.
கடந்த 2023-ல் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, `முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நாற்பது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்தார்கள். ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதை ஏற்க மறுத்துவிட்டார்’ என்று பேசினார்.
சபாநாயகர் அப்பாவுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, இதை எம்.பி எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் இன்று (ஆகஸ்ட் 7) விசாரணை மேற்கொண்டது சென்னை பாரிமுனையில் உள்ள சிறப்பு நீதிமன்றம். விசாரணையில் கலந்து கொண்டு சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக வாதங்களை முன்வைத்தார் அதிமுகவின் பாபு முருகவேல்.
விசாரணையின் முடிவில் வரும் செப்டம்பர் 9-ல் மீண்டும் நடக்கும் விசாரணையின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றம்.