
நடப்பாண்டின் கோடைக்காலம் இன்றுடன் (மே 16) முடிவுக்கு வருவதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ஜானின் முகநூல் கணக்கில் இன்று வெளியிடப்பட்ட பதிவில் கூறியுள்ளதாவது,
`கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று (மே 16) முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதி உள்பட வட தமிழ்நாட்டில் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வரவிருப்பது உற்சாகமான வார இறுதியாகும்.
தமிழ்நாட்டிற்கான தனித்துவமான ஆண்டுகளில் இதுவும் ஒன்று. நடப்பாண்டில் தமிழ்நாட்டில் வெப்ப அலை காணப்படவில்லை, மேலும், கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளைப் பின்பற்றி, நடப்பாண்டின் மே மாதத்திலும் சென்னையின் வெப்பநிலை ஒரு நாளில்கூட 40 டிகிரி செல்சியஸை தாண்டாது.
கிழக்கு-மேற்கு வெட்டு மண்டலத்தின் ஒரு பகுதியான இந்த பரந்துபட்ட சுழற்சி, பொதுவாகவே மே மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் உருவாகும். இப்போது முதல்முறையாக மே மாதத்தின் நடுப்பகுதியில் இதைப் பார்க்கிறேன்.
இந்த வெட்டு மண்டலத்தின் முடிவில், பொதுவாகவே குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். எனவே அரேபியக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும், ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (மாத இறுதியில்) உருவாகியிருக்கும்.
அரேபியக் கடல் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சுழற்சி மேலும் நெருங்கிவரும். வட தமிழக மாவட்டங்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் ஆகியவற்றின் கடற்கரைகளில் கிழக்கில் இருந்து காற்று வீசும் (Easterly Winds). எனவே உற்சாகமான நாட்கள் வரவிருக்கின்றன.
இன்றைய மழை
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
பெங்களூருவில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
இனி கோடைக்காலத்தின் குறைவான தாக்கத்தை மாதந்தோறும் அனுபவியுங்கள். அதற்காக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்பது அர்த்தமல்ல. மே மாதத்தின் சராசரி தட்பவெப்ப சூழலைக் கருத்தில்கொள்ளும்போது, இயல்பைவிடக் குறைவாக இருக்கும்’ என்றார்.