திடீரென கன்டெய்னருக்கு உள்ளே இருந்து சத்தம் வந்தது அப்போது..: சேலம் சரக டிஐஜி உமா

ஒரு கட்டத்தில் கால் இடறி கீழே விழுந்த ஸுமானை பிடிக்கச் சென்றார் துணை ஆய்வாளர். ஆனால் அவரைத் தடுத்துக் கீழே தள்ளிவிட்டு, கொலை செய்ய முயற்சித்தார் ஸுமான்
திடீரென கன்டெய்னருக்கு உள்ளே இருந்து சத்தம் வந்தது அப்போது..: சேலம் சரக டிஐஜி உமா
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்.27) காலை கேரள ஏ.டி.எம். கொள்ளையர்களைக் கைது செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார் சேலம் சரக டிஐஜி உமா. அவர் பேசியவை பின்வருமாறு:

`இன்று காலை 6 மணி அளவில் நாமக்கல் எஸ்.பி.க்கு திருச்சூர் மாவட்ட ஏ.டி.எம்.களில் கிரெட்டா காரை உபயோகித்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அந்த கிரெட்டா கார் ஒரு கன்டெய்னர் லாரியில் கொண்டுவரப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

சுமார் 8.45 மணி அளவில் குமாரபாளையம் சாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது ராஜஸ்தான் பதிவெண் கொண்ட ஒரு கன்டெய்னர் லாரி நில்லாமல் சென்றது. அதைப் பின்தொடர்ந்து காவல்துறையினர் சென்றனர். அந்த கன்டெய்னர் லாரி சாலையில் சென்றுகொண்டிருந்த பிற வாகனங்கள் மீது மோதிவிட்டு எங்கும் நில்லாமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது.

காவல்துறையினர் கன்டெய்னர் லாரியை துரத்தித் சென்று மடக்கிப் பிடித்துனர். அதில் இருந்த ஓட்டுனர் உள்ளிட்ட 5 நபர்களைக் கைது செய்து கன்டெய்னர் லாரிக்கு முன்பும் பின்பும் காவல்துறை வாகனங்களுடன் பாதுகாப்பாக வெப்படை காவல் நிலையத்துக்கு லாரி கொண்டு செல்லப்பட்டது. ஆனால் வழியில் திடீரென்று கன்டெய்னருக்கு உள்ளே இருந்து சத்தம் வந்தது, அப்போது ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ஸுமான் என்ற நபரின் உதவியுடன் பின் கதவு திறக்கப்பட்டது.

உடனே உள்ளே இருந்து நீல நிறப் பையுடன் வெளியே குதித்து அசாரூதின் என்ற நபர் ஓட ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து காவலர் ஒருவரை தாக்கிவிட்டு ஸுமானும் ஓட ஆரம்பித்தார். துணை ஆய்வாளரும், ஆய்வாளரும் அவர்களை துரத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் கால் இடறி கீழே விழுந்த ஸுமானை பிடிக்கச் சென்றார் துணை ஆய்வாளர்.

துணை ஆய்வாளரை தடுத்துக் கீழே தள்ளிவிட்டு, அவரைக் கொலைசெய்ய ஸுமான் முயற்சித்தார். இதனால் பின்தொடர்ந்து வந்த ஆய்வாளர் ஸுமானை துப்பாக்கியால் சுட்டார். மேலும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு திரும்பிய அசாருதீனை நிற்கச் சொல்லி எச்சரித்தார் ஆய்வாளர். ஆனால் அருகே இருந்த பெரிய பெரிய கற்களை எடுத்து ஆய்வாரைத் தாக்க அசாருதீன் முயற்சித்ததால், அவரைக் காலுக்குக் கீழே சுட்டுப்பிடித்தார் ஆய்வாளர்.

ஏ.டி.எம்.களை குறிவைத்து கொள்ளையில் ஈடுபடும், இந்த 7 கொள்ளையர்களும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். காயம் அடைந்தவர் கோவையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவலில் இருப்பவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in