பொங்கல் அன்று யுஜிசி - நெட் தேர்வு: தேதிகளை மாற்ற சு. வெங்கடேசன் கோரிக்கை!

மத்திய அரசின் தேர்வு முகமைகள் அறிவிக்கின்ற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.
பொங்கல் அன்று யுஜிசி - நெட் தேர்வு: தேதிகளை மாற்ற சு. வெங்கடேசன் கோரிக்கை!
1 min read

வரும் பொங்கல் அன்று நடைபெறவுள்ள யுஜிசி - நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதியுள்ளார் சி.பி.எம். எம்.பி. சு. வெங்கடேசன்.

வரும் ஜனவரியில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் யுஜிசி நெட் தேர்வுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஜனவரி 3 தொடங்கி ஜனவரி 16 வரை, மொத்தம் 8 நாட்களில் பல்வேறு பாடங்களுக்குத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

இந்த அட்டவணையில் பொங்கல் பண்டிகை நாட்களன்று அறிவிக்கப்பட்டுள்ள நெட் தேர்வு தேதிகளை மாற்றும்படி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் என்.டி.ஏ.வின் பொது இயக்குநர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன். இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் அவர் வெளியிட்ட பதிவு பின்வருமாறு,

`மத்திய அரசின் தேர்வு முகமைகள் அறிவிக்கின்ற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.  கடந்த மாதம்தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வு தேதியை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது.

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெருமக்களின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டாட்டத்தோடும் தொடர்புடையதாகும். ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் என தேர்வர்களும், பெற்றோர்களும் என் தலையீட்டை நாடியுள்ளனர்.

இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சருக்கும், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனருக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in