தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் எம்.பி. சு. வெங்கடேசன்.
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் அயல்நாடுகளுடனான கலாச்சார உறவுகளை மேம்படுத்த `இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில்’ (ICCR) செயல்பட்டு வருகிறது. கடந்த செப்.15-ல் குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில், தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ICCR.
இந்தப் பணிக்கான தகுதியாக தமிழ் இலக்கியத்தில் முதுநிலைப் பட்டத்துடன் பி.எட். அல்லது எம்.எட். முடித்திருக்க வேண்டும் எனவும், பள்ளி / கல்லூரியில் தமிழாசிரியராக ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்து. இத்துடன் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விரும்பத்தக்கத் தகுதிகளாக கூடுதலாக ஹிந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழாசிரியர் பணிக்கு ஹிந்தியும் சமஸ்கிருதமும் எதற்காகத் தெரிந்திருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கேள்விகளை எழுப்பினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி. சு. வெங்கடேசன் இது தொடர்பாக தன் எக்ஸ் வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டவை பின்வருமாறு:
`தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத அறிவை எவ்வாறு பொருத்தமான தகுதிகளாகக் கருத முடியும்? இந்த அப்பட்டமான ஹிந்தி திணிப்பையும், வெளியுறவு அமைச்சகத்தின் தமிழர் விரோத நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்க்கிறேன். இந்த அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என்றார்.
மேலும் இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்குத் தான் எழுதிய கடிதத்தின் நகலைப் பகிர்ந்துள்ளார் சு. வெங்கடேசன்.