நேற்று (ஆகஸ்ட் 31) தாம்பரத்துக்கு அருகே உள்ள பொத்தேரியில் இருக்கும் தனியார் மாணவர்கள் விடுதிகளில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு பலவித போதை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 11 மாணவர்கள் இன்று (செப்.01) ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும் தடை செய்யப்பட்ட பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்களின் விற்பனையும் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று தாம்பரத்துக்கு அருகே உள்ள பொத்தேரியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பல்கலைகழகத்தைச் சுற்றி இருக்கும் தனியார் மாணவர்கள் விடுதிகளில் தாம்பரம் காவல் ஆணையரின் உத்தரவின் கீழ் சுமார் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் மாணவர்கள் விடுதிகளில் இருந்து பலவித போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் 1 மாணவி உள்ளிட்ட 11 மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்கள் இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இவர்கள் அனைவரையும் ஜாமினில் விடுவித்தார் நீதிபதி. மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்ததற்காக பிரபல ரௌடி செல்வமணி, உணவக ஊழியர்கள் மகேஷ் குமார், சுனில் குமார், டப்லூ உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.