மாநில திட்டக்குழு நடத்திய முதற்கட்ட ஆய்வில் தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்தது தெரியவந்துள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து, அதன் பிறகு ஐ.டி.ஐ., டிப்ளோமா, இளங்கலை பட்டப்படிப்பு ஆகியவற்றை படிக்கும் பெண் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என்கிற புதுமைப்பெண் திட்டத்தை கடந்த 2022-ல் அறிமுகப்படுத்தியது தமிழக அரசு.
இந்த உதவித்தொகை நேரடியாக சம்மந்தப்பட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 2023-ம் வருடத்தின் முடிவில் உயர்கல்வி பயிலும் 2,30,820 மாணவிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 17,032 மாணவிகள் பலனடைந்துள்ளனர்.
மொத்த பயனாளிகளான 2,30,820 மாணவிகளில், 36.7 சதவீதத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவையும், 30.6 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவையும், 30.6 சதவீதத்தினர் அட்டவணை சாதிகள் பிரிவையும், 1.3 சதவீதத்தினர் அட்டவணை பழங்குடியினர் பிரிவையும், 0.7 சதவீதத்தினர் இதர சமூகத்தினர் பிரிவையும் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், புதுமைப்பெண் திட்டத்தால் ஏற்பட்ட பலன்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது மாநில திட்டக்குழு. கடந்த நவ. 2023 தொடங்கி பிப்ரவரி 2024 வரை சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், ஈரோடு, திருவாரூர், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 84 உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சுமார் 5,095 மாணவிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் புதுப்பெண் திட்டத்தால் கூடுதலாக சுமார் 13,681 மாணவிகள் ஐ.டி.ஐ., டிப்ளோமா, இளங்கலை பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. இதில் 38.6 சதவீதத்தினர் அட்டவணை சாதிகள் பிரிவையும், 34.4 சதவீதத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவையும், 24.8 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பிரிவையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், புதுமைப்பெண் திட்டத்தால் பலனடைந்த மாவட்டங்களில் முதலிடத்தை சேலம் பிடித்துள்ளது. இதனை அடுத்து சென்னை, தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மேலும், இந்தத் திட்டத்தால் நகரப்பகுதி மாணவிகளைவிட ஊரகப்பகுதி மாணவிகள் அதிகமாகப் பலனடைந்துள்ளனர்.
மாநில திட்டக்குழுவின் ஆய்வில், கல்லூரி மற்றும் போக்குவரத்து தொடர்பான செலவுகளுக்கு இந்த உதவித்தொகையை மாணவிகள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.