
வீட்டை ஆய்வகமாக மாற்றி மெத்தபெட்டமைன் போதைப்பொருளை தயாரித்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை சென்னையில் கைது செய்துள்ளது காவல்துறை.
சென்னையின் கொடுங்கையூரில் பிரவீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமாக அடிக்கடி பலர் வந்து செல்வதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிரவீனின் இல்லத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டையே ஆய்வகமாக மாற்றி அங்கே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வந்தது காவல்துறை சோதனையின்போது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரவீனுடன் போதைப்பொருள் தயாரிப்பில் கீஷோர், ஞான பாண்டியன், நவீன், தனுஷ், பிளம்பிங் பிரான்ஸிஸ் ஆகிய 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் சிலர் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு அருண் என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அது தரமில்லாமல் இருந்ததால் சௌகார்பேட்டையில் வேதிப் பொருட்களை வாங்கி வந்து வேதியியல் படிக்கும் ஞான பாண்டியன் உதவியுடன், பிரவீனின் வீட்டில் இவர்கள் போதைப் பொருளை தயார் செய்துள்ளனர்.
அவ்வாறு தயாரித்த போதைப் பொருளை தாங்கள் பயன்படுத்திவந்தது மட்டுமல்லாமல் பிற நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினரிடம் இவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை அடுத்து இவர்களுக்கு முன்பு போதைப்பொருள் வழங்கிய அருண் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரவீனின் வீட்டில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான 245 கிராம் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளையும், அதைத் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.