
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஆக. 13) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவியிடம் இருந்து பட்டம் பெற மாணவி ஒருவர் மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா இன்று (ஆக. 13) நடைபெற்றது. இதில் வேந்தர் என்ற வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும், சிறப்பு விருந்தினராக இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஏ.பி. திம்ரியும் கலந்துகொண்டனர்.
முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை நிறைவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பட்டம் பெறவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நண்பகல் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் ஒவ்வொரு மாணவருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி பட்டம் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது, ஜீன் ஜோசப் என்கிற மாணவி ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுப்பு தெரிவித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் என். சந்திரசேகரனிடம் இருந்து பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து மேடையில் இருந்து கீழே வந்த மாணவி ஜீன் ஜோசப், தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதால் அவரிடம் இருந்து பட்டம் பெற விரும்பவில்லை என்றும், இதனால் துணைவேந்தரிடம் இருந்து பட்டத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்ததாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.