
தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே இன்று (ஜூலை 9) சாலை மறியல் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருச்சி மாநகரில் வயலூர் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி அபிஷேக் என்ற மாணவர் படித்து வந்தார். கல்லூரி கட்டணம் செலுத்தப்படாததால், அந்த மாணவரை பேராசிரியர்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, விடுதியில் உள்ள குளியலறையில் மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன்பிறகு மாணவரின் உடல் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
இதை அடுத்து, மாணவரின் உறவினர்களும், சக மாணவர்களும் இணைந்து அரசு மருத்துவமனைக்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினார்கள்.
மாணவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் கல்லூரியின் விடுதிக் காப்பாளரை கைது செய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும், கைது செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் போராட்டம் நடத்தியவர்கள் தெரித்தனர்.
மேலும், விடுதிக் காப்பாளர் மீது அளிக்கப்பட்ட புகாரை ஏற்க மறுத்ததாகக் கூறி காவல்துறைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் போராட்டத்தைக் கைவிடக்கோரி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.